
பிரேவ்மைன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில், சூர்யா சேதுபதி, சம்பத், வரலெட்சுமி, தேவதர்ஷினி, அபி நட்சத்திரா உள்ளிட்டோர் நடிப்பில், அனல் அரசு தயாரிப்பு, இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “பீனிக்ஸ் வீழான்”.
கதைப்படி.. வடசென்னை பகுதியில் ஆளும்கட்சி எம்.எல்.ஏ சம்பத்தை பொது இடத்தில் சூர்யா கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்கிறான். அவனுக்கு 17 வயது என்பதால் அரசு கூர் நோக்கு இல்லத்தில் அடைத்து, விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிடுகிறது. கொலை செய்யப்பட்ட எம்.எல்.ஏ வின் மனைவி வரலெட்சுமி சூர்யாவை சிறையிலேயே கொலை செய்ய பல கட்டங்களாக ஆட்களை அனுப்புகிறார். ஆனால் ஒவ்வொரு முறையும் சூர்யா எதிரிகளை வீழ்த்தி தப்பித்து வருகிறான்.

எதற்காக ஆளும்கட்சி எம்.எல்.ஏ வை சூர்யா கொலை செய்தான் ? அவனது பின்னணி என்ன என்பது மீதிக்கதை..
சண்டை பயிற்சி இயக்குநர் படத்தின் இயக்குநர் என்பதால் படம் முழுவதும், கதையோடு ஆக்ஷன் காட்சிகள் நிறைந்துள்ளது. எளிய குடும்பத்து இளைஞனின் கனவுகள், குடும்ப சூழ்நிலையை எதார்த்தமாக கண்முன்னே நிறுத்தியிருக்கிறார் இயக்குநர். படத்தின் முதல்பாதியில் இருந்த சுவாரஸ்யம் இரண்டாம் பாதியில் இல்லை என்றாலும் சோர்வில்லாமல் கதை நகர்கிறது. அதேபோல் க்ளைமேக்ஸ் காட்சியில், சூர்யா பீனிக்ஸ் போன்றவன் என படத்தின் தலைப்பிற்கு ஜெயிலர் விளக்கம் சொன்னதோடு படத்தை முடித்திருக்கலாம்.

முதல் படத்திலேயே தன்னை ஒரு நடிகராக நிலைநிறுத்திக்கொள்ள சூர்யா கடுமையாக உழைத்திருக்கிறார். தனது உருவத்திற்கேற்ப கதையை தேர்வு செய்து வெற்றியும் பெற்றிருக்கிறார் என்றே சொல்லலாம். திரையுலகில் இவரது தந்தை விஜய் சேதுபதி, நடிப்பில் எட்டடி கூட தாண்டாத நிலையில், அவரது மகன் பதினாறு அடிகளை தாண்டி இருக்கிறார் என்றே சொல்லலாம். ஆரம்பத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பை மகனோடு ஒப்பிட்டால், மகனிடம் வீழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். அந்தளவிற்கு தொழில் நேர்த்தி சூர்யாவின் நடிப்பில் வெளிப்படுகிறது.
அதேபோல் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், இசையமைப்பாளர் சாம் சி எஸ் இருவரும் தங்களது பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
வரலெட்சுமி, தேவதர்ஷினி இருவரும் கதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள். படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் அனைவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.