
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதியில் வசிக்கும் பண்ணீர் செல்வம் கடந்த 48 ஆண்டுகளாக திமுகவின் அடிமட்ட தொண்டனாகபயணித்தாகவும், அவருக்கு கட்சி எந்தவிதத்திலும் உதவவில்லை என்கிற விரக்தியில், தனது மனக்குமுறலை முகநூலில் பதிவிட்டு, ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
கடந்த 20.2.2025 அன்று பாண்டிச்சேரி தவளக்குப்பத்தில் அரவிந்த் கண் மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை செய்து மருத்துவரின் அறிவுறுத்தலின்படி வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறேன்.
ஒரு கண் மகன் உதவியாலும்
மற்றொரு கண் மருமகன் கருணையாலும் செய்து கொண்டேன். என் விழி இரண்டில் பெரியார், அண்ணாவையும்
என் கையளவு இதயத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களையும், கழகத் தலைவர் மாண்புமிகு தளபதி அவர்களையும் சுமந்து கழக மேடைகளில் கண்ணொளி கொடுத்த கலைஞர் வாழ்க என்று கத்தியவன். தெருத் தெருவாய் சுற்றி ஓட்டுப் பொறுக்கி உங்களை வெற்றி பெற வைத்தவன். அண்டாவையும், குண்டாவையும் விற்று நகையும், நட்டையும் அடகு வைத்து கொடி பிடித்து கோஷம் போட்டு, மறியல் செய்து, சிறைக்குப் போய், உண்டியல் குலுக்கி, கையேந்தி பிச்சை எடுத்து தலைவர்களையும் பேச்சாளர்களையும் அழைத்து வந்து நிகழ்ச்சிகளை நடத்தியவன்
கறியும், சோறும் ஆக்கி போட்டவன், நான் உயிராய், உணர்வாய், உடலாய், குடும்பமாய், தொழிலாய், நண்பர்களாய், தோழமையாய் நேசித்த சுவாசித்த பயணித்த இயக்கம் திமுக. கழகம் கைவிட்ட நிலையில் மதியாதார் தலைவாசல் மிதியாதே என்று கலைஞர் சொன்ன பொன்மொழிகளை நெஞ்சில் சுமந்து சுயமரியாதையோடும், விரக்தியிலும், வேதனையிலும் திராவிட மண்ணில் இருந்து வருகிறேன். போலிகளும், கூலிகளும், வந்தேறிகளும், கட்சி மாறிகளும், பல்லக்கு தூக்கிகளும், அல்லக்கைகளும், பிழைப்பு வாதிகளும், காரியவாதிகளும் நிறைந்துவிட்ட பொது வாழ்வில் சமூக நீதி ஏமாளியாய் வாழ்ந்து வருகிறேன்
கூலிக்கு ஆள் பிடித்து கொண்டு வந்து நிறுத்தும் இவர்கள் எங்களைப் போன்ற திராவிட மாடல் போராளிகளை கட்சி நிகழ்ச்சிக்கு அழைப்பதும் இல்லை, தகவலை தெரிவிப்பதும் இல்லை. பாழுக்குழைத்து பசையற்று போய் கோமணத்தையும் இழந்து அம்மணமாய் நிற்கும் ஏமாந்த இளித்த வாய் தொண்டர்களில் நான் முதன்மையானவன்.
வருங்காலம் தேர்தல் காலம், வறண்ட, இருண்ட காலம், தேர்தல் முடிவுகள் மாறுபடலாம், விருத்தாசலம் தொகுதியில் அனைத்தையும் இழந்து நிற்கும் எங்களிடம் இருப்பது விலை போகாத ஓட்டு ஒன்று தான், யாரேனும் வந்து அந்த ஓட்டை கேட்டால் போடுவோம், இல்லையேல் ஆற்றிலோ, குளத்திலோ போட்டுவிட்டு
திராவிட மாடல் பயணத்தை தொடர்வோம் தொண்டர்களைத் தேடி தலைவர்கள், தொண்டனை தேடி மருத்துவம், தொண்டனை தேடி நிதியுதவி, தொண்டனை தேடி ஆறுதல், தொண்டனை தேடி முதல் மரியாதை, தொண்டனை தேடி பதவி, தொண்டனை தேடி பொறுப்பு என்பதெல்லாம், தொண்டனை ஏமாற்றும் தாரக மந்திரம். வெத்துவேட்டுகளின் வறட்டு கோஷம், வெற்று முழக்கம், வெற்று விளம்பரம், தேர்தல் காலத்தில் பலன் தராது. விளம்பரத்தினாலே உயர்ந்தவன் வாழ்க்கை நிரந்தரமாகாது.