குளோபல் பிக்சர்ஸ் அழகராஜ் ஜெயபாலன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் பல்ஸ் திரைப்படத்தை நவீன் கணேஷ் இயக்கியிருக்கிறார். மாஸ்டர் மகேந்திரன் நாயகனாக நடித்திருக்கிறார். கூல் சுரேஷ், அர்ச்சனா, KPY சரத் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். அபிஷேக் A R இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் டீஸர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் நடிகர் கூல் சுரேஷ் பேசும் போது, இந்த படத்தில் நான் நடிக்கத் தொடங்கிய போது, படத்துக்கு பெயர் வைக்கப்படவில்லை. பின்னர் இயக்குனர் நவீன் வாட்ஸ்அப்பில் படத்தின் ஸ்டில் அனுப்பியபோது, ஆங்கில அறிவு குறைவினால் படத்தின் பெயரை ‘Pulse’ என்பதற்கு பதிலாக ‘Piles’ என்று தவறாக புரிந்து கொண்டேன். அதனால் கதை குறித்து பல்வேறு கற்பனைகள் உருவானது. பின்னர் இயக்குனர் நவீன் தெளிவாக விளக்கி, படத்தின் தலைப்பின் உண்மையான அர்த்தத்தை புரிய வைத்தார். அதற்கு அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள் என்று கூறினார். மேலும், இயக்குனர் நவீன் அவர்களின் பணிப்பற்று மற்றும் அமைதியான செயல்பாட்டை பாராட்டிய கூல் சுரேஷ், “ஷூட்டிங் ஸ்பாட்டில் எந்த கோபமும் இல்லாமல், அனைவரிடமிருந்தும் சிறப்பான வேலை வாங்கும் திறன் அவருக்கு உள்ளது. தயாரிப்பாளர் அளித்த முழு ஆதரவுடன் இந்த படம் கண்டிப்பாக பெரிய வெற்றியை அடையும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

நடிகை அர்ச்சனா பேசும்போது, மாதவிடாய் என்பது எந்த வகையிலும் தீட்டு அல்ல. அது கடவுள் பெண்களுக்கு கொடுத்த ஒரு வரம். அதுவே பெண்களை தாயாக மாற்றும் அடிப்படை. அதில் அவமானப்பட வேண்டிய எந்த விஷயமும் இல்லை என்று அவர் தெளிவாக கூறினார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட ஒரு அனுபவத்தை நினைவுகூர்ந்த அவர், அந்த சமயத்தில் எனக்கு ஏற்பட்ட உடல் வலியை புரிந்து கொண்டு, ஒரு சகோதரராக கூல் சுரேஷ் எனக்கு உதவி செய்தார். பெண்கள் அந்த காலகட்டத்தில் அனுபவிக்கும் உடல் வலி மற்றும் மனநிலை மாற்றங்களை புரிந்து கொள்வது அவசியம். அத்தகைய புரிதலுடன் செயல்பட்ட ஒரு ஆணாக அவர் இருந்தது எனக்கு பெருமையாக உள்ளது என்று தெரிவித்தார்.

நடிகர் சேது பேசும்போது, இயக்குனர் நவீன் கணேஷ் எனக்கு நீண்ட நாட்களாக தெரிந்தவர். இந்த கதையை அவர் சொன்னபோதே இது ஒரு மெடிக்கல் த்ரில்லர் என்பதால் எனக்கு மிகவும் பிடித்தது. ட்ரைலரை பார்த்தபோது அது மிகுந்த பரபரப்புடனும், மிரட்டலாகவும் இருந்தது, மியூசிக் டைரக்டர் த்ரில்லர் படத்துக்கு தேவையான சரியான பிஜிஎம்ஐ கொடுத்திருக்கிறார். பின்னணி இசை படத்தின் தாக்கத்தை மேலும் அதிகரிக்கிறது. கதாநாயகன் மகேந்திரனை, நான் ‘மாஸ்டர்’ படத்திலிருந்தே கவனித்து வருகிறேன். கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் கொண்ட நடிகர். இந்த படத்தில் அவர் எடுத்த முயற்சி ஒவ்வொரு காட்சியிலும் தெளிவாக தெரிகிறது. குறிப்பாக சண்டை காட்சிகளில் அவர் எடுத்த ரிஸ்க் பாராட்டத்தக்கது. இந்த படம் அவருக்கு ஒரு பெரிய திருப்புமுனையாக அமையும் என்றார்.

இயக்குனர் நவீன் கணேஷ் பேசும்போது, புதுமுக இயக்குனராக இருந்த என்னிடம் முழு நம்பிக்கை வைத்து, கதையின் மீது நம்பிக்கை வைத்து எந்த சமரசமும் இல்லாமல் படம் எடுக்க முழு ஆதரவு அளித்த தயாரிப்பாளருக்கு என் முதல் நன்றி. பட்ஜெட் குறித்து கவலைப்படாமல், படத்துக்குத் தேவையான அனைத்தையும் செய்து கொடுத்தார். ஹாஸ்பிட்டல் கதைக்களம் என்பதால் ரியல் லொகேஷன்களில் படமாக்கினோம். அதற்கு ஏற்ற வகையில் ஆர்ட் டைரக்டர் முகமது மிக இயல்பான செட் வடிவமைப்பை செய்துள்ளார்.

கன்னட திரையுலகில் முன்னணி எடிட்டராக இருக்கும் சோம் சேகர் இந்த படத்துக்கு பணியாற்றியது எனக்கு பெரிய பலம். ஒரு த்ரில்லர் படத்துக்கு மிக முக்கியமான எடிட்டிங்கை அவர் கிரிஸ்பாகவும் வேகமாகவும் வழங்கியுள்ளார். ஸ்டண்ட் மாஸ்டர் மிரட்டல் செல்வா பெயருக்கேற்ற வகையில் ஆக்சன் காட்சிகளை வடிவமைத்துள்ளார். குறிப்பாக கிளைமாக்ஸில் ரோப் மற்றும் டூப் இல்லாமல் மகேந்திரன் செய்த சண்டைக் காட்சி தியேட்டரில் நிச்சயம் கைத்தட்டல் பெறும் என்று கூறினார். இது ‘பைல்ஸ்’ அல்ல, ‘பல்ஸ்’. மனிதனின் இதயத் துடிப்பு எப்படி தொடர்ச்சியாக இருக்கிறதோ, அதேபோல் இந்த படத்தை பார்க்கும் போது பார்வையாளர்களுக்கும் இடைவிடாத பதற்றம் இருக்கும். அதனால்தான் இந்த தலைப்பை தேர்வு செய்தோம் என்றார்.

நடிகர் மகேந்திரன் பேசும்போது, இயக்குனர் நவீன் எனக்கு பல வருடங்களாக பழக்கம். நாங்கள் இருவரும் பல பயணங்களை பகிர்ந்த நண்பர்கள். அவர் இந்த கதையை சொல்லும்போது, நான் முதலில் ஒரு நடிகராக இல்லாமல் ஒரு நண்பராகவே கேட்டேன். ஆனால் கதையை கேட்க கேட்க அதன் மீது இருந்த ஆர்வம் அதிகரித்தது. ஒரு ரியல் ஹாஸ்பிட்டல் போலவே தோன்ற வேண்டும், அதே நேரத்தில் ஷூட்டிங்கிற்கும் ஏற்றதாக இருக்க வேண்டும். அந்த சவாலான பணியை ஆர்ட் டைரக்டர் முகமது மிக நேர்த்தியாக செய்துள்ளார். தயாரிப்பாளர் ஒரு புதுமுக குழுவை முழுமையாக நம்பி, எந்த கேள்விகளும் இல்லாமல் எங்களுக்கு சுதந்திரம் கொடுத்தது மிகப் பெரிய விஷயம். இன்றைய சூழலில் அந்த நம்பிக்கை கிடைப்பது அரிது. அந்த நம்பிக்கையை நாங்கள் காப்பாற்றுவோம் என்றார்.

KPY சரத் பேசும்போது, படத்தின் தலைப்பே வித்தியாசமாக உள்ளது. ட்ரைலரை பார்க்கும் போது படம் மிகவும் வலுவான மெடிக்கல் த்ரில்லராக உருவாகியிருப்பது தெரிகிறது. குறிப்பாக பின்னணி இசை மிக உயர்ந்த தரத்தில் அமைந்துள்ளது. என்று அவர் தெரிவித்தார். கதாநாயகன் மகேந்திரன் நாங்கள் எல்லாம் ஒரே நண்பர்கள் குழு. அவர் எவ்வளவு கடினமாக உழைப்பவர் என்பது எனக்கு நன்றாக தெரியும். ‘மாஸ்டர்’ படத்துக்குப் பிறகு இந்த படம் அவருக்கு ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமையும். உடலை வருத்தி, ஆபத்தான ஆக்சன் காட்சிகளில் அவர் எடுத்த முயற்சி பாராட்டுக்குரியது என்றார்.

K ராஜன் பேசும்போது, இன்றைய சூழலில் பெரிய நடிகர்களை வைத்து படம் எடுப்பதே தயாரிப்பாளர்களுக்கு சவாலாக மாறியுள்ளது. அந்த நிலையில், புதுமுகங்களை நம்பி, ஒரு நல்ல கதையின் மீது நம்பிக்கை வைத்து பெரிய முதலீடு செய்த தயாரிப்பாளர் விக்ரம் பாராட்டுக்குரியவர். ‘பல்ஸ்’ என்ற தலைப்பை பற்றி பலர் பேசினார்கள். ஆனால் ஒரு படத்தின் வெற்றியை தீர்மானிப்பது தலைப்பு அல்ல, கதையில் இருக்கும் வலிமை தான். ஹாஸ்பிட்டல் பின்னணியில் எடுக்கப்பட்ட இந்த கதையில், பார்வையாளர்களை இருக்கையில் கட்டிப்போடும் அளவுக்கு உள்ளடக்கம் இருக்க வேண்டும். என்று குறிப்பிட்டார். கதாநாயகன் மகேந்திரனை
சின்ன வயதிலிருந்தே கவனித்து வருகிறேன். ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் நடித்தாலும், தனக்கான இடத்தைப் பிடிக்க தொடர்ந்து போராடி வருகிறார். உழைப்பு ஒருநாளும் வீண் போகாது. ஆனால் ஹீரோவான பிறகு சம்பள விஷயங்களில் தயாரிப்பாளரை நினைத்தே முடிவு எடுக்க வேண்டும். தயாரிப்பாளர் நலமுடன் இருந்தால் தான் சினிமா துறை நலமாக இருக்கும் என்றார்.





