
ஆர்ட் அப் ட்ரையாங்கிள்ஸ் ஃபிலிம் கம்பெனி தயாரிப்பில், தமிழ் தயாளன் இயக்கத்தில், ஆதவன், ஷீலா, ஜாக்குலின், சார்லஸ், விணோத் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “கெவி”.
கதைப்படி.. கொடைக்கானல் அருகே உள்ள வெள்ள கெவி மலைக்கிராம மக்கள் சாலை, மருத்துவம் உள்ளிட்ட மனிதர்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் வசித்து வருகின்றனர். குறிப்பாக பிரசவ காலங்களில் பெண்கள் படும் வேதனைகளை சொல்லிமாளாது என்கிற அளவுக்கு சிற்பத்தை அனுபவிக்கிறார்கள். சில நேரங்களில் ஏதாவது ஒரு உயிர் மட்டுமே மிஞ்சுகிறது என்கிறார்கள். இந்நிலையில் ஷீலாவுக்கு பிரசவ வழி ஏற்பட்டு வழியால் துடிக்கிறார். மருத்துவமனையும், சாலையும் இல்லாததால் ஊர் மக்கள் தொட்டில் கட்டி இரவு நேரத்தில் மலைகளில் மருத்துவமனைக்கு சுமந்து செல்கிறார்கள். இதற்கிடையில் தங்களின் ஊருக்கு தேவையான சாலையை அமைத்துத் தர வேண்டும் என கேட்டதற்காக ஷீலாவின் கணவர் ஆதவன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்துகின்றனர் காவல்துறையினர்.

மருத்துவர் வர மறுத்த நிலையில், இருள் சூழ்ந்த மலைப்பகுதியில் தீப்பந்தம் வெளிச்சத்தில் பல்வேறு இடையூறுகளை கடந்து, பதட்டத்துடன் கற்பமான பெண்ணை தொட்டிலில் சுமந்து செல்கின்றனர்.
பின்னர் மருத்துவமனையை அடைந்தார்களா ? ஷீலாவிற்கு பிரசவம் ஆனதா ? அவரது கணவர் என்ன ஆனார் என்பது மீதிக்கதை…
அறிவியல் வளர்ச்சியால் கிராமங்களில் எவ்வளவோ முன்னேற்றங்கள் ஏற்பட்டு இருந்தாலும், சுதந்திர இந்தியாவில் குறிப்பாக தமிழக மலைப்பிரதேசமான கொடைக்கானல் அருகே வசிக்கும் மலைக்கிராம மக்களின் வலியையும், துயரங்களையும் சினிமாத்தனம் இல்லாமல் எதார்த்தமாக ஆட்சியாளர்கள் உணரும் வகையில் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

இனிமேலாவது கெவி மலைக்கிராம மக்களின் வேதனைகளுக்கு தீர்வு கிடைக்குமா ? என்கிற கேள்வியோடு பார்வையாளர்கள் கலைந்து செல்வதே இயக்குநரின் வெற்றியாக கருதலாம்.
இதுபோன்ற படங்களுக்கு மானியத்துடன் விருதும் வழங்கி அரசு கௌரவப் படுத்த வேண்டும். அதேபோல் இயற்கையோடு பின்னிப் பிணைந்து வாழ்ந்துவரும் மலைக்கிராம மக்களின் அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்பது நமது விருப்பமும் கூட…