“பேய் கதை” படத்தின் இசை & முன்னோட்டம் வெளியீடு !

Spread the love

ஜெர்ரி’ஸ் ஜர்னி இண்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜுன் மோசஸ் இயக்கத்தில் அறிமுக நடிகர் வினோத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘பேய் கதை’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது.  இவ்விழாவில் இசையமைப்பாளர்கள் சபேஷ் – முரளி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட, படக்குழுவினர் பெற்று கொண்டனர்.

‘பேய் கதை’ திரைப்படத்தில் வினோத், ஆர்யலட்சுமி, கானா பல்லவ், சுகன்யா, ஆஷ் மெலோ, செல்வா, எலிசபெத் சுராஜ், ஜீ.வி. மகா, மைக்கேல், ஸ்ரீசுமந்த், ஆஷிக் பீட்டர், ரோடஸ், ஜீவிதா, ருச்சி பிங்க்லே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரவீண் எஸ். ஜி. ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு போபோ சசி இசையமைத்திருக்கிறார். கலகலப்பும் திகிலும் நிறைந்த குதூகல திரில்லராக தயாராகி இருக்கும் இப்படத்தை ஜெர்ரி’ஸ் ஜர்னி இன்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனம் சார்பில் ஜெர்ரி தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் சுரேஷ் வழங்குகிறார்.

ஆகஸ்ட் 29ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘பேய் கதை’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் படத்தின் இயக்குநர் ஜுன் மோசஸ் பேசுகையில், எனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இருக்கிறேன் என நம்புகிறேன்.
படத்தின் இசையமைப்பாளரான போபோ சசி என்னுடைய பால்ய கால நண்பர். அவரும் நானும் இணைந்து பணியாற்றி இருக்கிறோம். இந்த விழாவிற்கு இசையமைப்பாளர்கள் சபேஷ் – முரளி அவர்களை சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தோம். அவர்களும் இங்கு வருகை தந்திருக்கிறார்கள். இதற்காக அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தில் இணைந்து பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தை பார்த்து உற்சாகமடைந்து தமிழகம் முழுவதும் வெளியிடும் ஸ்ரீ தேனாண்டாள் சுரேஷூக்கும் நன்றி.

‘பேய் கதை’ கம்ப்ளீட் ஃபேமிலி என்டர்டெய்னர். திரில்லர்-காமெடி -சஸ்பென்ஸ் என ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. அந்த படங்களில் ரத்தம், வன்முறை, பயங்கரம் ஆகியவை இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் அவை எதுவும் இருக்காது. குழந்தைகள் கூட இந்த படத்தை தாராளமாக பார்க்கலாம். அவர்களுக்கும் இது ஒரு திரில்லிங்கான தருணமாக இருக்கும். இப்படத்தின் திரைக்கதையில் புதிய முயற்சிகளை செய்திருக்கிறோம். கதை சொல்லும் பாணியிலிருந்தும், அதனை விவரிக்கும் வகையிலும், அதில் உள்ள தொழில்நுட்ப விஷயங்கள் வரை புதிதாக முயற்சித்து இருக்கிறோம். திரையரங்க அனுபவத்திற்காக பல விஷயங்களை புதிதாக செய்திருக்கிறோம். படத்தில் எட்டு நிமிட அளவிற்கு வி ஆர் மோஷன் (V. R. Motion) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருக்கிறோம். தற்போதுள்ள குழந்தைகள் வி ஆர் மோஷன் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறார்கள். அவர்களை கவர்வதற்காக தொடர்ந்து எட்டு நிமிட அளவிற்கு இந்த தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி இருக்கிறோம். படம் முழுவதும் எதிர்பாராத சுவாரசியமான திருப்பங்கள் இருக்கின்றன. இது ரசிகர்களை உற்சாகப்படுத்தும். இந்தப் படத்தில் பார்வையாளர்கள் முகம் சுழிக்கும் வகையில் எந்த காட்சியும் இடம்பெறவில்லை. சிறிய முதலீட்டில் உருவாக்கப்பட்ட நல்லதொரு முயற்சி. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து இந்த படத்திற்கு ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

வசனகர்த்தா நவீன் பேசுகையில், இந்தப் படத்திற்காக வசனம் எழுதிய அனுபவமும், அதற்கான பயணமும் வித்தியாசமாக இருந்தது.‌ இயக்குநர் என்னிடம் ரசிகர்களின் கோணத்திலிருந்து உரையாடலை எழுது என்றார். முதல் 15 நிமிடங்களை மட்டும் தான் என்னிடம் எழுதுவதற்காக வழங்கினார்கள். பத்து நாட்கள் எடுத்துக்கொண்டு எழுதிக் கொடுத்தேன். அதன் பிறகு படத்தின் முதல் பாதி வரை எழுதிக் கொடுங்கள் என கேட்டனர்.‌ அப்போதும் நான் குழம்பினேன். அதன் பிறகு இரண்டாம் பாதி கதையை முழுவதுமாக என்னிடம் விவரித்தார். அதைக் கேட்டவுடன் எனக்கு ஆச்சரியம் அதிகமாகி விட்டது. ஏனெனில் இந்த படத்தில் திரில்லர், சஸ்பென்ஸ் என நிறைய விஷயங்கள் இருக்கின்றன.‌ அனைவரும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக பார்க்கும் வகையில் அமைந்திருக்கிறது. இதுவரை தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு மட்டுமே உரையாடல்களை எழுதி வந்த எனக்கு முதன் முதலாக பெரிய திரையில் உரையாடல் எழுத வாய்ப்பு அளித்துள்ளனர். இதற்காக இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

பாடலாசிரியர் யூகி பிரவீண் பேசுகையில், 2017ம் ஆண்டில் வெளியான ‘அட்டு’ படத்திற்கு அனைத்து பாடல்களையும் எழுதி இருந்தேன். போபோ சசி எனக்கு எல்லா பாடல்களையும் எழுதுவதற்கு வாய்ப்பளித்தார். நான் இதுவரை 30 பாடல்களை எழுதி இருக்கிறேன். இதில் 20 பாடலை போபோ சசிக்காக எழுதியிருக்கிறேன். எங்கள் கூட்டணியில் இன்னும் ஏராளமான ஹிட் பாடல்கள் வரவேண்டும் என  பிரார்த்திக்கிறேன். இந்த படத்திலும் எல்லா பாடல்களையும் எழுதும் வாய்ப்பை போபோ சசி அளித்திருக்கிறார். இதற்கு ஒப்புதல் அளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

நடிகை ஆஷ் மெலோ பேசுகையில், கன்னடத்தில் நடிகர் துனியா விஜய் உடன் நடித்திருக்கிறேன். தமிழில் நான் நடித்திருக்கும் முதல் படம் இது. இதற்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் எனக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்கள் என்றார்.

நடிகை எலிசபெத் பேசுகையில், இளம் திறமைசாலிகள் இணைந்து இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இப்போது இளம் திறமைசாலிகள் பலரும் திரைப்படத்தை இயக்கி வருகிறார்கள். எங்களைப் போன்ற மூத்த நடிகைகளை மறந்து விடுகிறார்கள். இந்தப் படத்திற்கு இசை மிக சிறப்பாக அமைந்திருக்கிறது, படமும் நன்றாக வந்திருக்கிறது, நாயகனுக்கு அம்மாவாக நடித்திருக்கிறேன். அனைவரும் பார்த்துவிட்டு ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

நடிகை ஜீ.வி.மகா பேசுகையில், இந்தப் படத்தின் மூலமாகத்தான் நான் நடிகையாக அறிமுகமாகிறேன். இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய இயக்குநருக்கும், படக்குழுவினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இயக்குநர் என்னுடைய நண்பராக இருந்தாலும் ஆடிஷன் வைத்து தான் குறிப்பிட்ட கதாபாத்திரத்துக்கு என்னை தேர்வு செய்தார். அத்துடன் எனக்கு அவர் அளித்த ஊக்கம் காரணமாகவே இப்படத்தில் நடித்திருக்கிறேன்.‌ இந்த திரைப்படம் ஏனைய பேய் படங்களை போல் இல்லை, புதுமையான நாகரீகமான நல்லதொரு ஃபேமிலி என்டர்டெய்னராக உருவாகி இருக்கிறது என்றார்.

இசையமைப்பாளர் போபோ சசி பேசுகையில், இயக்குநரும், நானும் 25 ஆண்டு கால நண்பர்கள். நாங்கள் இருவரும் ஏற்கனவே இணைந்து பணியாற்றி இருக்க வேண்டும். ஆனால் அதற்கான தருணம் தற்போது தான் அமைந்திருக்கிறது. ‘பேய் கதை’ படத்தை தனித்துவமாக உருவாக்கியிருக்கிறார். தற்போது தான் இப்படத்திற்கான பின்னணி இசை சேர்ப்பு பணிகளை நிறைவு செய்தேன். படம் சிறப்பாக வந்திருக்கிறது, பாடல்களும் சிறப்பாக இருக்கின்றன என்றார்.

இசையமைப்பாளர் சபேஷ் பேசுகையில், படத்தின் முன்னோட்டத்தை பார்க்கும் போது இயக்குநர் எதையோ புதுமையாக செய்திருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு எழுகிறது. படம் சிறப்பாக இருக்கிறது. இந்த விழாவிற்கு அழைப்பு விடுப்பதற்காக இயக்குநர் எங்களை சந்தித்தார். அப்போது நான் உங்களை பார்த்திருக்கிறேன் என அவர் கூறினார் அப்போது அவரிடம் நாங்கள் வருடத்திற்கு 25 திரைப்படங்களில் பணியாற்றினோம். அப்போது கழுத்தை திருப்பி பக்கத்தில் யார் இருக்கிறார்கள் என்று பார்ப்பதற்கு கூட நேரம் இருக்காது. எங்கள் பார்வை முழுவதும் திரையிலும், கீ போர்டிலும் தான் இருக்கும் என்று விளக்கம் அளித்தேன்.

எங்கள் குடும்பத்தை சேர்ந்த இசையமைப்பாளர் போபோ சசி இதில் பணியாற்றி இருக்கிறார். தற்போதெல்லாம் ஒரு பாடல் நிலைத்து நிற்கிறது என்றால் அது வெஸ்டர்ன் பாணியிலான பாடலாக இருந்தாலும் அதில் சிறிதளவு மெலோடி இடம்பெற்றிருக்க வேண்டும். மெலோடி இருந்தால்தான் அந்தப் பாடல் ஹிட் ஆகும். இது நூறு சதவீதம் போபோ சசி பாடல்களில் இருக்கிறது. அதனால் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்றார்.

இசையமைப்பாளர் முரளி பேசுகையில், இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. படத்தின் முன்னோட்டத்தை பார்க்கும் போது இசையும், ஒளிப்பதிவும் சிறப்பாக இருக்கிறது. இந்த திரைப்படம் ஹாலிவுட் தரத்தில் இருக்கிறது. அதற்கு ஏற்றாற் போல் பின்னணி இசையும், பாடல்களும் அமைந்திருக்கின்றன. 

இயக்குநர் ஜுன் மோசஸை சிறிய வயதில் இருந்தே பார்த்திருக்கிறேன். அவர் எப்போதும் எங்களுடைய வீட்டில் போபோ சசியுடன் தான் இருப்பார். இந்த இருவரும் சின்ன வயதிலிருந்து எதையாவது செய்து கொண்டே இருப்பார்கள். அதனால் தான் தற்போது இருவரும் திரையில் ஜொலிக்கிறார்கள். இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள் என்றார்.

நாயகன் வினோத் பேசுகையில், இந்தத் திரைப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் இசையமைப்பாளர்கள் சபேஷ் – முரளியின் ரசிகன். ஏனெனில் ‘வாலி’ படத்திற்கு பின்னணி இசையமைத்தது இவர்கள்தான். அவர்கள் இங்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்து வாழ்த்தியமைக்கு நன்றி.

இயக்குநர் ஜுன் மோசஸ் என்னுடைய நண்பர் தான். நானும் அவரும் பிசினஸ் பார்ட்னர்ஸ். ஒரு நாள் சாதாரணமாக பேசிக் கொண்டிருக்கும்போது திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற என் விருப்பத்தை சொன்னவுடன் அவர் ஒரு வரியில் கதையை சொன்னார்.‌ அதன் பிறகு அதனை விரிவுபடுத்தி பணியாற்றத் தொடங்கி அந்தப் பணி தற்போது இங்கு வரை வந்திருக்கிறது. அவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என வாழ்த்துகிறேன். நான் கார்ப்பரேட் நிறுவனத்தில் 22 ஆண்டு காலம் பணியாற்றி இருக்கிறேன். அங்கு கற்றுக் கொள்ளாத பல விஷயங்களை  சினிமாவில் ஒரே வருடத்தில் கற்றுக் கொண்டேன் என்றார்.

Related Posts

“பூங்கா” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா !

Spread the love

Spread the loveஅழகு மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள “பூங்கா” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் ஜாகுவார் தங்கம்,  “லவ் டுடே” படத்தின் இயக்குனர் பாலசேகரன், நடிகர் ஜாவா சுந்தரேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு,…

Read more

“வீர தமிழச்சி” படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

Spread the love

Spread the loveமகிழினி கலைக்கூடம் நிறுவனத்தின் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சுரேஷ் பாரதி இயக்கத்தில் நடிகர்கள் சஞ்சீவ் வெங்கட், இளயா, சுஷ்மிதா சுரேஷ் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ‘வீர தமிழச்சி’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்க தவறிய செய்திகள்

“பூங்கா” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா !

“பூங்கா” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா !

“வீர தமிழச்சி” படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

“வீர தமிழச்சி” படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

34 ஆண்டுகளாக பொது மக்களின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாத அதிகாரிகள் !

34 ஆண்டுகளாக பொது மக்களின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாத அதிகாரிகள் !

இராமநாதபுரத்தில் தொகுதி அளவிலான விளையாட்டு போட்டிகள் !

இராமநாதபுரத்தில் தொகுதி அளவிலான விளையாட்டு போட்டிகள் !

“சுமதி வளவு” திரைப்படம் செப்டம்பர் 26 முதல் ஜீ-5 தளத்தில் வெளியீடு !

“சுமதி வளவு” திரைப்படம் செப்டம்பர் 26 முதல் ஜீ-5 தளத்தில் வெளியீடு !