
இன்பினிட்டி கிரியேஷன்ஸ் சார்பில் பி ரவிச்சந்திரன் தயாரிப்பில், விமல், ஜனா, பூஜிதா பொன்னாடா, ஹர்ஷிதா, ஜுஹி, ரவி மரியா, சிங்கம்புலி, லொள்ளு சபா சாமிநாதன், சாம்ஸ், வையாபுரி, மொட்டை ராஜேந்திரன், புகழ் உள்ளிட்டோர் நடிப்பில், எழில் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “தேசிங்குராஜா_2”.
கதைப்படி.. இரண்டு காவல்நிலைய இன்ஸ்பெக்டர்களுக்கு இடையேயான மாமுல் வசூல், எல்லைப் பிரச்சினைகளில், விமல், புகழ் ( பெண் இன்ஸ்பெக்டர் ) இருவரும் மோதிக்கொள்கின்றனர். வாடகை பிரச்சினை சம்பந்தமாக ரவுடிகள் டீம் காவல் நிலையத்தை சூரையாட வருகின்றனர். சிசிடிவி மூலம் கண்காணித்து, இன்ஸ்பெக்டர் விமல் அவர்களை காமெடியாக சமாளித்து விரட்டுகிறார். இதற்கிடையில் ரவுடி ஒருவன் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அந்த கொலைக்கு அமைச்சர் ரவி மரியா தான் காரணம் எனக்கூறி, அவரது மகனை இதேபோல் கொலை செய்வதாக அமைச்சர் முன்னிலையிலேயே மற்றொரு ரவுடி ( ஜனா ) சபதம் செய்கிறான்.

நீதிமன்றத்திற்கு வரும் அமைச்சரின் மகனை பாதுகாக்க, இன்ஸ்பெக்டர் விமலின் டீம் தயாராகிறது. இந்த டீமுக்கு உயர் அதிகாரியாக அவரது கல்லூரி தோழியே வருகிறார். பின்னர் ஒரு ரவுடி யின் உடல் தலை இல்லாமல் கிடக்கிறது. அந்த ரவுடியின் தலையை தேடி அழைகிறது போலீஸ் டீம்.
இந்நிலையில் தமிழக அமைச்சரவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டு, சக அமைச்சர்கள் கூடி அமைச்சர் ரவி மரியாவை பதவி விலக வலியுறுத்துகின்றனர். இந்த ஆட்சியே என் தயவில் உருவானது, நீங்கள் அடித்த கூத்து ( கூவத்தூர் ) அனைத்தும் சீடி யாக என்னிடம் உள்ளது. நான் வெளியிட்டால், தேர்தலில் ஒருவரும் ஜெயிக்க முடியாது என மிரட்டி விட்டு சாமர்த்தியமாக வெளியே வருகிறார் ரவி மரியா.
அமைச்சர்களின் அந்தரங்க சீடி வெளியானதா ? ரவி மரியாவின் மகனை இன்ஸ்பெக்டர் டீம் காப்பாற்றியதா ? இல்லையா ? என்பது மீதிக்கதை..

படத்தின் முதல் பாதி பல கிளைக் கதைகளுடன் வெவ்வேறு திசைகளில் பயணித்து மெதுவாக நகர்ந்தாலும், இரண்டாம் பாதியில் அமைச்சர் கதாப்பாத்திரத்தில் ரவி மரியாவின் எமோஷனல் நடிப்பு அனைவரையும் ரசிக்க வைக்கிறது. கிட்டத்தட்ட படத்தின் முழு பொறுப்பையும் ரவி மரியாவின் தலையில் தூக்கி வைத்துள்ளார் இயக்குநர் என்று சொல்லும் அளவிற்கு, ரவி மரியாவே இந்தப் படத்தை களகளப்பாக நகர்த்திச் செல்கிறார்.
விமல் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அதேபோல் ஜனா புதுமுகம் என்றாலும் கதாப்பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து, அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சண்டைக்காட்சிகள் பிரமாதம் என்கிற அளவுக்கு ஜனா அசத்தியிருக்கிறார்.

படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் அனைவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள். குறிப்பாக இயக்குநர்கள் பத்துப்பேரை நடிக்க வைத்துள்ள இயக்குநர் எழிலுக்கு வாழ்த்துக்கள்.
இயக்குநர் எழில் இதுவரை இயக்கிய படங்களை நம்பி தியேட்டருக்கு வரும் ரசிகர்களுக்கு ஏமாற்றமே ! என்கிற அளவுக்கு திரைக்கதையில் நிறைய தடுமாற்றங்கள் இருப்பதை உணர முடிகிறது. காமெடியை எதிர்பார்த்து யாரும் தியேட்டருக்கு வரக்கூடாது எனக் கூறும் விதமாக எழில் ( அவருக்கு என்ன நிர்பந்தமோ ) திரைக்கதை அமைத்திருக்கிறார். இயக்குநர், தன்னை நம்பி முதலீடு செய்யும் தயாரிப்பாளரின் நல்ல மனதை கொஞ்சம் யோசித்து இருக்கலாம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.