
லண்டனில் சிம்பொனி இசையை அரங்கேற்றிய தமிழ்நாட்டைச் சேர்ந்த இசைஞானி இளையராஜாவிற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், பிரபலங்கள் என பலரும் பெருமையோடு வாழ்த்து தெரிவித்திருந்தனர். முதலமைச்சர் மு க ஸ்டாலின் இளையராஜாவின் 50 ஆண்டுகால திரையிசை பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவு செய்துள்ளதாக அறிவித்திருக்கிறார்.
இந்நிலையில் பிரதமர் மோடியை சந்தித்த இளையராஜா, மோடியை சந்தித்து எனது சிம்பொனி 01 Valiant குறித்தும், பல்வேறு விஷயங்கள் குறித்தும் உரையாடி அவரது வாழ்த்தையும், ஆதரவையும் பெற்றுக் கொண்டேன் என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார்.

இதையடுத்து பிரதமர் மோடி, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு இளையராஜா அவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இசைஞானியான அவரது மேதைமை நமது இசை மற்றும் கலாச்சாரத்தில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எல்லா வகையிலும் முன்னோடியாக இருக்கும் அவர், சில நாட்களுக்கு முன் லண்டனில் தனது முதலாவது மேற்கத்திய செவ்வியல் சிம்பொனியான வேலியண்ட்டை வழங்கியதன் மூலம் மீண்டும் வரலாறு படைத்துள்ளார்.

இந்த நிகழ்ச்சி உலகப் புகழ்பெற்ற ராயல் பில்ஹார்மோனிக் இசை குழுவுடன் இணைந்து நடத்தப்பட்டது. இந்த முக்கியமான சாதனை அவரது இணையற்ற இசைப் பயணத்தில் மற்றொரு அத்தியாயத்தை குறிக்கிறது. உலக அளவில் தொடர்ந்து மேன்மையுடன் விளங்குவதை இதை எடுத்துக்காட்டுகிறது என்று தமிழில் வாழ்த்து சொல்லி எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.