
வைகை அணையில் நீர் நிரம்பியுள்ள நிலையில், உசிலம்பட்டியின் ஜீவாதாரமான 58 கிராம கால்வாய் திட்டத்திற்கு தற்போது வரை தண்ணீர் திறக்காமல் இருக்கும் தமிழ்நாடு அரசைக் கண்டித்து பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில்.. வழக்கமாக வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியவுடன் 58 கிராம கால்வாய்க்கு தண்ணீர் திறந்துவிடப்படும் நிலையில், தற்போது 69 அடிக்கு மேல் நீர் நிரம்பி, இரண்டு முறை வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டும் தண்ணீர் திறக்கப்படவில்லை. திமுக அரசின் இந்த அலட்சியப்போக்கால் 50,000 மக்களுக்கான குடிநீர் தேவை, 2,336 ஏக்கர் அளவு பரந்துள்ள விவசாயத்திற்கான பாசனம் மற்றும் கால்நடை வளர்ப்பு என அனைத்தும் பாதிக்கப்பட்டு 110 கிராம மக்கள் தவிக்கவிடப்பட்டுள்ளனர்.

திமுக அரசின் அராஜகப் போக்கைக் கண்டித்தும் கால்வாய்க்கு தண்ணீர் திறந்துவிடக் கோரியும் விவசாயப் பெருமக்களுடன் இணைந்து நமது தமிழக பாஜக போராட்டம் நடத்தியதோடு, வணிகர்களும் கடையடைப்புப் போராட்டம் நடத்தினர். இதுபோன்று தொடர்ந்து தினந்தோறும் பொதுமக்கள் அனைவரும் போராடி வரும் வேளையில், அவர்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுக்காமல், வெற்று விளம்பரங்களிலும் அரசியல் பிரச்சாரங்களிலும் மூழ்கியுள்ளது திராவிட மாடல் அரசு.
கடந்த நான்காண்டுகளில் டாஸ்மாக்தோறும் சாராயத்தின் வரத்து மட்டும் என்றும் குறையாத நிலையில், கிராமந்தோறும் குடிநீர் மற்றும் பாசனத்திற்கான நீர் வரத்து மட்டும் குறைவது ஒன்றே திமுகவின் “நாடு போற்றும் நல்லாட்சியின்” சாதனை சரித்திரத்தை உணர்த்தும். தாகத்தில் தவிக்கவிட்டு நீருக்காக நித்தம் நித்தம் போராட வைக்கும் இந்த திமுக அரசை ஆட்சி அரியணையிலிருந்து நீக்குவோம் ! நீராதாரம் காத்து தமிழகத்தின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவோம் ! என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.