
சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிப்பில், சரத்குமார், தேவயானி, சித்தார்த், மீதா ரகுநாத், சைத்ரா உள்ளிட்டோர் நடிப்பில், ஶ்ரீ கணேஷ் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “3BHK”.
கதைப்படி.. சென்னையில் வாடகை வீட்டில், வாசுதேவன் ( சரத்குமார் ), சாந்தி ( தேவயானி ) தம்பதி தங்களது மகன் பிரபு ( சித்தார்த் ), மகள் ஆர்த்தியிடன் ( மீதா ரகுநாத் ) வசித்து வருகின்றனர். தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் சரத்குமார், தனது குழந்தைகளின் எதிர்கால நலனை நினைத்து சொந்தமாக மூன்று படுக்கை அறைகள் கொண்ட வீடு வாங்க வேண்டும் என பல்வேறு வகையில் திட்டம் தீட்டுகிறார். பணமும் சேர்த்து வைக்கிறார். ஆனால் ஒவ்வொரு முறையும் ஏதோ வகையில் தடைபடுகிறது. மகன் சித்தார்த் படிப்பில் குறைவான மதிப்பெண் பெறும் போதெல்லாம், மனம் சோர்ந்து விடாமல் தோல்வியைக் கண்டு துவண்டு விடாதே என பாசத்துடன் தேற்றி உற்சாகப்படுத்தி மகனின் முயற்சிக்கு உறுதுணையாக இருக்கிறார்.

மகன் பிரபு நன்றாக படித்து, நல்ல வேலைக்குப் போய் தனது சொந்தவீடு கனவை நிறைவேற்றுவான் என நம்பிக்கையுடன் இருக்கிறார். ஆனால் மகன் சித்தார்த் இஷ்டப்பட்ட வேலை கிடைக்காவிட்டாலும், கிடைக்கும் வேலையை செய்து தந்தையின் கஷ்டத்தில் பங்குபெற நினைக்கிறார்.
இருபது ஆண்டுகளாக சொந்தவீடு வாங்கவேண்டும் என்கிற வாசுதேவனின் கனவு நிறைவேறியதா ? இல்லையா என்பது மீதிக்கதை..

நடுத்தர குடும்பத்தினரின் வாழ்க்கை முறையையும், சென்னையில் வாடகை வீட்டில் வசித்துவரும் ஒவ்வொருவரின் சொந்தவீடு கனவுகளையும் எதார்த்தமாக கண்முன்னே நிறுத்தியிருக்கிறார் இயக்குநர். படம் பார்ப்பவர்கள் ஒவ்வொருவரும், படத்தின் காட்சிகளில் ஏதோ வகையில் தங்களை கணெக்ட் செய்யும் அளவுக்கு திரைக்கதை நகர்கிறது.

சரத்குமார் பொறுப்பான தந்தையாக, சந்தோஷம், கோபம், வெறுப்பு என பல்வேறு விதமான முகபாவனையுடன் நடிப்பை வெளிப்படுத்தி பார்வையாளர்களின் மனதில் தனது கதாப்பாத்திரத்தை பதிய வைத்துள்ளார். அவரது மனைவியாக தேவயானி பொருத்தமான ஜோடி என்றாலும், அவ்வப்போது வந்து போகிறார்.
சித்தார்த், மீதா ரகுநாத் இருவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
மொத்தத்தில்.. நிகழ்காலத்தின் நிஜங்களை தேர்வுசெய்து, மக்களின் மனங்களில் இடம்பெறும் வகையில், ஒரு படைப்பை கொடுத்துள்ளது படக்குழு.