
விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரிப்பில், விஜய் ஆண்டனி, அஜய் தீஷன், சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிரிகிடா, தீப்ஷிகா உள்ளிட்டோர் நடிப்பில், லியோ ஜான் பால் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “மார்கன்”.
கதைப்படி.. சென்னையில் உடல் கருகிய நிலையில், குப்பை தொட்டியில் பெண் சடலம் கிடக்கிறது. இது சமூக வலைதளம் மூலம் பரவுகிறது. இதேபோல் மும்பையில் தனது மகளின் உடல் குப்பை கிடங்கில் கிடந்த சம்பவத்தை நினைவு கூர்ந்து, தமிழ்நாடு காவல்துறை உயர் அதிகாரியை தொடர்பு கொண்டு விசாரிக்க முன் வருகிறார் முன்னாள் ஏடிஜிபி துருவ் ( விஜய் ஆண்டனி ). பின்னர் நீச்சல் பயிற்சி மாணவர் தமிழறிவு ( அஜய் தீஷன் ) விசாரணை வலையத்திற்குள் கொண்டு வரப்படுகிறார். விசாரணையில் தமிழறிவுக்கு இருக்கும் அதீத ஞாபகசக்தி இருப்பதும், அதற்கு மருந்து உட்கொள்வதும் தெரிய வருகிறது.

இதற்கிடையில் அதே பாணியில் பெண் மருத்துவர் ஒருவர் கொலை செய்யப்படுகிறார். பின்னர் தமிழறிவு கொடுக்கும் தகவல்களை வைத்து குற்றவாளியை நெருங்குகிறது காவல்துறை. யார் ? எதற்காக இவ்வாறு பெண்கள் கொலை செய்யப்படுகிறார்கள் என்பது மீதிக்கதை..

அழகான பெண் விஷ ஊசி செலுத்தி உடல் முழுவதும் கருப்பாக மாறி இறந்து கிடக்கும் சடலம், அதனை விசாரிக்கும் போலீஸ் என வித்தியாசமான கதைக்களத்துடன் விறுவிறுப்பாக நகர்ந்த கதை, ஃபிளாஷ் பேக் காட்சிகளில் மெதுவாக நகர்கிறது. வாழ்க்கைக்கு நிறம் தான் பிரச்சினையா ? அதனால் ஒருவரது மனம் எப்படி பாதிக்கிறது ? அதனால் ஏற்படும் பின்விளைவுகளை புதுவிதமான கோணத்தில் சொல்ல முயற்சித்த இயக்குநர், திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.
விஜய் ஆண்டனி தனது வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அஜய் தீஷன் தனக்குள் இருக்கும் திறமையை வெளிப்படுத்தி பார்வையாளர்களின் மனதை கவர்ந்துள்ளார். மகாநதி சங்கர், பிரிகிடா உள்ளிட்டோர் சிறப்பாக நடித்துள்ளனர்.