
அண்ணா பல்கலைக் கழக பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி ஞானசேகரனுக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்தால் 30 ஆண்டுகளுக்கும் குறையாத ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருப்பதை வரவேற்றும், திமுக ஆட்சியில் எஞ்சியுள்ள பாலியல் வழக்குகளுக்கு நீதி கோரியும் தமிழக பாஜகவின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழக பாரதீய ஜனதா கட்சி உட்பட பல அரசியல் கட்சிகள் முன்னெடுத்த அறப்போராட்டங்களின் விளைவாகவும், பாஜக கொடுத்த அழுத்தங்களுக்கு பதிலாகவும் அண்ணா பல்கலைக் கழக கொடூரச் சம்பவத்தின் நேரடிக் குற்றவாளி ஞானசேகரன் மீதான விசாரணை துரிதப்படுத்தப்பட்டு, இன்று 30 ஆண்டுகளுக்கும் குறையாத ஆயுள் தண்டனை கிடைக்கப் பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. சென்னை மகளிர் நீதிமன்றத்தின் இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை முழுமனதுடன் வரவேற்கிறேன்.

ஆனால் அதே சமயம் இந்த வழக்கில் மறைமுகத் தொடர்புடைய அந்த “சார்” யார் என்ற கேள்வியும், ஒருவேளை திமுக-வில் உள்ள முக்கியஸ்தர்களைக் காப்பாற்றும் நோக்கில் இந்த வழக்கு விசாரணை துரிதப்படுத்தப்பட்டதா ? என்ற சந்தேகமும் மக்கள் மனதில் வலுப்பெற்றுள்ளது.
காரணம் நடைபாதையில் பிரியாணி கடை வைத்து நடத்தி வந்த குற்றவாளி ஞானசேகரனுக்கு அரசு, அமைச்சர் வரை செல்வாக்கு இருந்ததை, வெளியான புகைப்படங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டன. ஆக, ஆளும் அரசின் துணையின்றி அரசின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் ஒரு பல்கலைக் கழக வளாகத்திற்குள் இரவு நேரத்தில் தைரியமாக எவரும் உள்நுழைய முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். எனவே மேடைக்கு மேடை சமூகநீதி பேசும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் “யார் அந்த சார்” என்ற கேள்விக்கான பதில் கிடைக்கும் வரை இந்த வழக்கு விசாரணைத் தொடர உத்தரவிட வேண்டும்.

இந்த சம்பவத்தின் ஆணிவேர் யார் என்பது மக்கள் மன்றத்தில் சரியாக அடையாளம் காட்டப்பட வேண்டும். அவர் அரசியல் புள்ளியாக இருந்தாலும் சரி, அரசு அமைச்சராக இருந்தாலும் சரி, அதிகாரியாக இருந்தாலும் சரி. அதுதான் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் நீதியை நம்பியிருக்கும் பிற பெண்களுக்கும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் செய்யும் கைம்மாறு.
மேலும் தமிழகத்தில் கடந்த நான்கு வருடங்களில், திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் சம்பந்தப்பட்ட அரக்கோணம் பாலியல் வழக்கு, 10 வயது அண்ணா நகர் சிறுமி பாலியல் வழக்கு, அயனாவரம் மனநலம் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வழக்கு, திமுக பொதுக்கூட்டத்தில் பெண் காவலரிடம் இளைஞரணி நிர்வாகிகள் அத்துமீறல், 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கடலூர் திமுக கவுன்சிலர் உட்பட பல பாலியல் குற்றச் சம்பவங்களும், வழக்குகளும் நிலுவையில் உள்ளனவே, அதற்கான விசாரணைகள் முறையாக நடைபெறுகின்றனவா ? அரக்கோணம் வழக்கில் இன்னும் முதல் தகவல் அறிக்கை கூடப் பதிவு செய்யப்படாமல் தாமதப்படுத்துவது ஏன் ? இதற்கான விளக்கத்தையும் மக்கள் மன்றத்தில் முதல்வர் சமர்ப்பிக்க வேண்டும்.