
ஆரஞ்ச் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில், ராஜேஷ் பத்மநாபன், சுஜாதா ராஜேஷ் தயாரிப்பில், ஶ்ரீராம் பத்மநாபன் இயக்கத்தில், பிஜேஷ் நாகேஷ், அக்ஷயா, தீபா சங்கர், நாஞ்சில் விஜயன், பேபி வர்ஷா, ஆதேஷ் பாலா, ஜூனியர் டிஆர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “வானரன்”.
கதைப்படி.. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அனுமந்தராவ் ( பிஜேஸ் ) பிழைப்புக்காக தமிழகத்தில் ஆஞ்சநேயர் வேடமிட்டு கோவில் திருவிழாக்களில் மக்களை சந்தோசப்படுத்துவது, விஷேச நாட்கள் இல்லாத சமயத்தில் தெருக்களில் பணம் வசூலித்து வாழ்க்கை நடத்தி வருகிறார். இந்நிலையில் ஒரு கிராமத்திற்கு சென்றிருந்தபோது, ஒயிலாட்டம் கற்றுக்கொடுக்கும் பெண் கலைஞரை சந்திக்கிறார். சமூகத்தில் பெண் கலைஞர்கள் சந்திக்கும் துயரங்களையும், வலிகளையும் கேட்டு வேதனையடைந்து, அந்தப் பெண்ணுக்கு பாது காவலராக வலம் வருகிறார். பின்னர் இருவரும் திருமணம் செய்து ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. மனைவி இறந்த நிலையில், தனது குழந்தையே உலகம் என வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் ஒருநாள் அந்த குழந்தை பள்ளியில் மயங்கி விழுகிறது. பின்னர் மருத்துவமனையில் பரிசோதித்தபோது மூளையில் கட்டி இருப்பதாகவும், உடனடியாக அற்றவேண்டும், அதற்கு நான்கு லட்சம் ரூபாய் தேவைப்படும் என மருத்துவர் கூற செய்வதறியாது தவிக்கிறார் அனுமந்தராவ். பின்னர் ஹஜ் பயணத்திற்காக சேமித்து வைத்திருந்த பணத்தை கொடுக்கிறார் ( குணா பாபு ) இஸ்லாமியர். பணத்துடன் பேருந்தில் வரும்போது பணம் காணாமல் போகிறது.
அதன்பிறகு என்ன நடந்தது ? அனுமந்தராவ் தனது குழந்தையை காப்பாற்றினாரா ? இல்லையா ? என்பது மீதிக்கதை…
கூத்து கலைஞர்களின் வலி, ஒற்றுமை, காதல், மத நல்லிணக்கம், மனிதாபிமானம், தந்தை, மகள் அன்பு என திரைக்கதை அமைத்து நிகழ்காலத்தை கண்முன்னே நிறுத்தி, யோசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.

அனுமன் வேடமிட்டு தெருத்தெருவாக சுற்றி யாசகம் பெறுவது, பொறுப்பான கணவர், பாசமுள்ள தந்தை என கதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் பிஜேஷ். அதேபோல் விஜயகாந்த் வேடத்தில் நடித்துள்ள நாமக்கல் விஜயகாந்த், ஆதேஷ் பாலா, குழந்தை நட்சத்திரம் என அனைவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் செய்திருக்கிறார்கள்.