
தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2025-2026 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், தமிழ்நாடு அரசு முதன்முறையாக ஒன்றிய அரசை போன்று, பொருளாதார அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் 2024-2025 ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.48 சதவீதமாக இருக்கும் என மத்திய அரசு கணித்துள்ள நிலையில், கடந்த 2021-2022 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டின் பொருளாதர வளர்ச்சி எட்டு சதவிகித்திற்கு மேலாக இருந்து வருவதாக ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோன்று 2024-2025 ஆம் நிதி ஆண்டிலும் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி எட்டு சதவிகித்திற்கும் மேல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. தேசிய அளவில் ஆறு சதவீத மக்கள் தொகை கொண்ட தமிழ்நாடு கடந்த 2023-2024 ஆம் நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.21% பங்களித்திருப்பதாகவும், தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 27 லட்சத்தி 22 கோடியாக உள்ளது. தனிநபர் வருமானத்தை பொறுத்தவரையில் தேசிய சராசரியை விட அதிகமாகவும், நாட்டிலேயே நாளாவது பெரிய மாநிலமாகவும் தமிழ்நாடு திகழ்வதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி கோவை, மதுரை, திருப்பூர், சேலம் ஆகிய நகரங்களுக்கு பரவலாக்கப்பட்டது. நகரம், கிராமம் இடையிலான வேறுபாடுகளை குறைக்க உதவி இருப்பதாக ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடக்கக்கல்வி முதல் உயர் கல்வி வரையிலான மாணவர் சேர்க்கை, ஆசிரியர், மாணவர் விகிதம் உள்ளிட்டவற்றில் தேசிய சராசரியை விட தமிழ்நாடு அதிகமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் இந்திய ரூபாய் நாணயத்தின் ₹ குறியீடுக்கு பதிலாக ரூ என்ற தமிழ் வார்த்தையை தமிழ்நாடு அரசு முதன்மைப்படுத்தி உள்ளது.