
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த காரணம்பேட்டை, நால் ரோடு சிக்னல் போக்குவரத்து நிறைந்த பகுதியாகும். கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இப்பகுதியில் சிக்னலை ஒட்டி அதிகளவில் சாலை ஓர தள்ளுவண்டி கடைகள் மற்றும் பேருந்து நிருத்தம், காம்ப்ளக்ஸ் கடைகள் உள்ளது.

இந்நிலையில் கோவையில் இருந்து பல்லடம் நோக்கி கேரள பதிவெண் கொண்ட லாரி வந்துகொண்டிருந்தது. லாரி காரணம்பேட்டை சிக்னலை வேகமாக கடந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரமுள்ள தள்ளுவண்டி கடைகள் மீது மோதிவிட்டு நிற்காமல், அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த மாருதி வேன், இரு சக்கரவாகனங்களை துவசம் செய்துவிட்டு அங்கிருந்த காம்ப்ளெக்ஸ் கட்டிட கடைக்குள் புகுந்துள்ளது. இந்த விபத்தில் ஒருவர் பலியானது டன், மூன்று பேர் காயமடைந்துள்ளனர். இதனிடையே லாரி மோதிய வேகத்தில் அங்கிருந்த மின்சார இரும்பு கம்பம் சேதமடைந்துள்ளது.


இதனிடையே விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த பல்லடம் டி.எஸ்.பி தலைமையிலான காவல்துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் உயிரிழந்த நபரின் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் பேருந்து நிறுத்தம் அருகிலேயே நடந்த விபத்தினால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனிடையே சிக்னல் முடிவதற்குள் அவசரப்பட்டு வேகமாக இயக்கியதால் லாரி கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டதா ? அல்லது ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இயக்கினாரா ? என்பது குறித்து போலீசாரின் விசாரணையின் முடிவில் தான் தெரியவரும். தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த விபத்தினால் அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டுள்ளது.