
தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக இருந்த தர்ம செல்வம் அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தர்மபுரி கிழக்கு திமுக மாவட்ட பொறுப்பாளராக இருந்த தர்ம செல்வம் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக தர்மபுரி திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் மணி நியமனம் செய்யப்பட்டுள்ளார் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன் திமுக மாவட்ட பொறுப்பாளராக இருந்த தர்ம செல்வம் சிலரை மிரட்டியதாகவும், மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யாராக இருந்தாலும் என் பேச்சை தான் கேட்க வேண்டும் என்று பேசிய ஆடியோ வெளியானது. அது சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், தற்போது திமுக மாவட்ட பொறுப்பாளராக இருந்த தர்ம செல்வம் அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். தர்மபுரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக உள்ள எம்.ஆர்.கே பண்ணீர் செல்வம் பரிந்துரையின் பேரில், நாடாளுமன்ற உறுப்பினர் மணிக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவி கிடைத்துள்ளதாக பேசப்படுகிறது.