
திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பேரூராட்சியில் சுமார் 30 ஆயிரம் பேர் வசித்துவரும் நிலையில் மொத்தம் உள்ள 15 வார்டுகளில் தி.மு.க – 6, அ.தி.மு.க – 4, காங்கிரஸ் -2, சுயேட்சை – 3 இடத்திலும் வெற்றி பெற்றிருந்த நிலையில் பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் விநாயகா பழனிச்சாமி, தி.மு.க.சார்பில் வேலுச்சாமி போட்டியிட்டனர். இதில் பழனிச்சாமி 8 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். வேலுச்சாமி 6 வாக்குகள் பெற்றார். பின்னர் சுயேச்சை வேட்பாளரான விநாயகா பழனிச்சாமி திமுக வில் இணைந்தார்.
இந்நிலையில் விநாயகா பழனிச்சாமி வார்டு உறுப்பினரிடம் பேசிய வில்லங்க ஆடியோ தற்போது வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 13 வது வார்டு உறுப்பினர் பெரியசாமியுடன் பேசுவதாக கூறப்படும் ஆடியோவில் ஏன் மாப்ள நேத்து ஏன் அப்படி பேசினீங்க, என்ன பழக்கம் இது என குறிப்பிட்டு பேசிவிட்டு பின்னர் 50 ஆயிரம் தான் வாங்கியிருக்கேன், 75 ஆயிரமெல்லாம் வாங்கவில்லை எனவும், எந்த கோயிலில் வந்து சத்தியம் பன்ன தயார் என கூறுகிறார். பின்னர் வாங்கிய பணத்தில் 25 ஆயிரத்தை பஞ்சாயத்து ஈ.ஓ. வுக்கு கொடுத்துவிட்டதாகவும் பழனிச்சாமி வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும் இதை விட கொடுமை ஒன்னரை கோடி செலவு செய்து தான் தலைவர் பதவிக்கு வந்ததாகவும் உண்மையை எடுத்துரைத்தார். மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜியுடனும், மு.பெ. சாமிநாதனுடன் நெருக்கமாக இருப்பதால் கம்முன்னு இருக்கானுங்கனும், கட்சிக்குள்ள தன்னை ஒன்னும் செய்யமுடியாது எனவும் நீங்க வேலைய பாருங்க மாப்பிள, ரெண்டு காசு சம்பாதிக்க பாருங்க, நாம ஒன்னும் திருடப்போறதில்ல, நாம வாங்கரதுக்கு என்ன? ஆளுக்கு தகுந்த மாதிரி வாங்கலாம் என அதிர்ச்சியூட்டும் வகையில் ஆடியோவில் பேசியுள்ளார்.

மேலும் குறிப்பிட்ட சமூகத்தை பற்றி பேசும்போது குவாட்டர் வாங்கி கொடுத்தால் போதும் எனவும் தரம் தாழ்ந்து பேசியுள்ளார். இந்த ஆடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.