
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அண்ணாஜீ ராவ் சாலை விரிவாக்கம், ஒன்றாவது தெருவில் இரும்பு கடை வைத்துள்ள ராஜிக் என்பவர் எஸ்.டி.பி.ஐ கட்சியின் கோவை வடக்கு மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் இவரது வீட்டில் அமலாக்க துறையைச் சேர்ந்த ஐந்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். அதிக அளவில் சட்ட விரோத பண பரிவர்த்தனை நடந்துள்ளதாக சந்தேகத்தின் பேரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

அதே போல் இரும்பு பொருட்கள் விற்கும் கடை உரிமையாளரும், எஸ்.டி.பி.ஐ கட்சியின் உறுப்பினருமான வாகித் ரகுமான் மற்றும் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் பழக்கடை நடத்தி வரும் ரீலா என்பவரது கடையிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். கேரளா பதிவு எண் கொண்ட கார்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் மூன்று பிரிவுகளாக பிரிந்து, மூன்று இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். சோதனை நடைபெறும் வீடுகளிலிருந்து யாரும் வெளியேறவோ, புதிதாக யாரும் உள்ளே நுழையவோ அனுமதிக்கப்படவில்லை. சோதனை நடைபெற்ற இடங்களின் வெளியே துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் சோதனை நடைபெறும் வீட்டின் முன்பு திரண்ட எஸ்.டி.பி.ஐ கட்சியினர், அமலாக்க துறையின் சோதனையை கண்டித்து முழக்கம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து வாகித் ரஹ்மான் வீட்டில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட வாகித் ரகுமானை பலத்த பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் காரில் அழைத்துச் சென்றனர்.
அப்போது அவரது வீட்டின் முன்பு கூடி இருந்த எஸ்.டி.பி.ஐ கட்சியினர் அமலாக்கத்துறைக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். இந்த சோதனையின் போது காவல்துறை டிஎஸ்பி அதியமான் மற்றும் ஆய்வாளர் சின்னகாமானன் ஆகியோர் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுனர்.